திங்கள், 4 பிப்ரவரி, 2013

அகம்புறம் - கடவுள்



கடவுள்.
பயத்திற்கும் நம்பிக்கைக்குமான மையப்புள்ளி.
உன்னை நீ நம்பாதவரை, உனக்காக பழியேற்க நீ காட்டும் ஒரு காரணம்.
உனது எல்லா காரியங்களுக்கும் அவரே பொறுப்பேற்பார்.
அவரின் பெயரால் நீ செய்யும் எல்லாமும் புனிதமே ஆகும்.
எத்தனை உயிர்கள் இறந்தால் என்ன?
அதைத்தான் நீ கடவுளின் பெயரால் அல்லவா செய்கிறாய்.
அதனால் நீ மன்னிக்க தேவையற்றவனாவாய்.
வேலியின் பெயரால் விலங்கு பூட்டி திரியும்.
கால் போனாலும் போகட்டும் கடிக்கின்ற செருப்பை மட்டும் கழட்டிவிடாதீர்.
எல்லோரையும் கொன்றபின் என் உயிர் மீதமிருக்கும் கடவுளின் பெயரால் அதயும் நீ எடுத்துக்கொள்.
சுடுகாட்டின் மத்தியில் உங்கள் ஆட்சியை அமையுங்கள். அங்கு உங்கள் கடவுளே அரசாளட்டும்.

அகம்புறம் - எரிகிறது




எரிகிறது
உடலெங்கும் பற்றி எரிகிறது
மூடிய இமைகள் தாண்டி வெப்பம் விழி தாக்குகிறது
இருட்டு அறைக்குள் முழு வெளிச்சம்
ஒன்றும் விளங்கவில்லை
கதகதப்பின் வெப்பம் கூடுகிறது
மனித சம்பாசனைகள் குறைந்து
தீ சுவாலை காதுகளை அடைக்கிறது
விரைத்த கால்கள் தானாக மேலெலுகிறது
தாடாலென ஒரு அடி
யாரது என் கால்களை அடித்தது
இந்த வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை
இத்தனை விறகுகளை என் மீது கொட்டியது யார்?
என் கட்டை விரல்களை கட்டி தீயிட்டது யார்?
என் இதயம் நின்று விட்டதா?
என் உதிரத்துளிகளின் ஓட்டம் ஓய்ந்து விட்டதா?
ஓ நான் இறந்து விட்டேனா!

திங்கள், 24 டிசம்பர், 2012

மனுநீதி

     இன்னும் அந்த சப்தம் என் காதுகளில் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

     உடம்பை விட்டு உயிர் மேலெழும்பி மீண்டும் கூட்டை வந்தடையும் அந்த சப்தம்.
     என் அம்மா கொட்டகையில் புளிதட்டும் போது அனல் மூச்சுக்காற்றுடன் ஒரு சப்தம், சுத்தியலுக்கும் கல்லுக்கும் இடையில் அடிபடும் புளியுடன் ஒரு ஜீவனின் மூச்சும் பட்டு தெரிக்கும் சப்தம்.
     சில நேரம் நான் பதறியதுண்டு சென்றமூச்சு திரும்புமா என்று!
     என் அம்மா தினமும் ஒரு மனு புளி வாங்குவாள். ஒரு கூடை நிறைய கிட்டத்தட்ட பதினான்கு கிலோ இருக்கும். முழுவதுமாக தட்டி நார் தனியாக கொட்டை தனியாக பிறித்து சுத்தம் செய்து மரச்சட்டம் ஒன்றில் அடைத்து அமுக்கி அழகுபடுத்தி பாக்கெட்டில் போட்டு தந்தால் மனுவுக்கு முழுதாய் ஆறு ரூபாய் கிடைக்கும்.
     வெயில் காலத்தில் புளி நன்றாக காய்ந்து இருக்கும். தட்டுவதும் சற்று எளிதாக இருக்கும். அந்த நாட்களில் ஒன்றரை மனு கூட வங்குவார்கள். மழை நாட்களில் ஒன்றுக்கே தறிதினத்தோம் தான்.
     கூடையை முள்தராசில் ஏற்றி புளியை கொட்ட ஆரம்பிப்பார் துரை என்கிற கணக்காபிள்ளை. குறிமுள் நடுநிலை தொட்டபின்பும் கொட்டுவதை நிறுத்த மாட்டான். அவ்வளவு தயாளன். “போதும்ப்பா ஒரேடியா போட்டுகிட்டே இருக்க கூடையில் இருந்து நாலுபுளியை அம்பாரத்தில் தள்ளிவிடுவாள் அம்மா.
    “சே சொல்ல சொல்ல கேக்காம போட்டு ரொப்பிட்டான், இத என்னைக்கு தட்டி ஒட்டி கவர் போடுறது புலம்பிக்கொண்டே புளியை கல்லருகே கொட்டி சுத்தியலை கையிலெடுக்கும் போது கீழ்கதிர் உச்சி தொட எத்தனித்துக்கொண்டிருக்கும்.
     குவியல் தொட்டு கல்லுக்கு புளியை கடத்துவது இடதுகை வேலை. சுத்தியல் பிடிக்கும் பொறுப்பு வலதுகைக்கு.
     இடதுகை புளியை எடுத்து கல்லில் வைக்கும். வலதுகை உச்சந்தலை தாண்டி சுத்தியை கொண்டு செல்லும். நுரையீரல் முழுவதும் காற்றை நிரப்பி பிடித்துக்கொண்டு குறி தவறாது ஒரு அடி, ஒன்று இரண்டு மூன்று கொட்டைகள் கணாமல் போயிருக்கும். பாதி அடிபட்ட புளியை கல்லில் வைத்துவிட்டு இட்துகை அடுத்ததை தேடி விடைபெறும், குறி தவறாது மீண்டும் ஒரு அடி அடித்து ஓரம் கொண்டு சேர்க்கும்.
     நதிபிரித்த ஓடையின் சலசலப்பு “அக்கா டீ காசு கொடுங்க ஒரு கையில் வாளி, ஒட்டு போட்ட பாவாடை சிறுமி நேத்திக்கு டீக்கு வேர நீங்க காசு தரல, நாளைக்கு தரேன்னு சொன்னீங்க, அம்மா உங்கட்ட வாங்கிட்டு போக சொன்னாங்க... ம்ம்.. தெளிந்த ஓடைதான் அவள்.
     நாண் பூட்டா வில்தண்டை நிமிர்த்தி காணிக்கை மாதிரி முடிந்துவைத்த முந்திக்காசை எடுத்து கொடுத்துவிட்டு மறக்காமல் சொல்லுவாள் “பாத்து சிந்தாம வாங்கியா என்னா.. ம்ம்...
“அக்கா வட?
“வேணாம் –வேண்டாம் இந்த ஒரு சொல்லில் அமர்தியாசென் என் அம்மாவிடம் தோற்க வேண்டும். ஆயிரம் கணக்கு வைத்திருப்பாள் அந்த ஒரு சொல்லில். “சாய்ந்தரம் ரெண்டும் வந்திருங்க. வந்ததும் அம்மா காசுனுதான் கேக்குங்க அவள் நாவின் சுவைஅரும்புகளை ஏமாற்றித்தான் எங்களுக்கு மிட்டாய் வாங்க காசு தந்தாள் என எங்களுக்கு அப்போது தெரியாது
     சிறுமி வாயிலை தாண்டுமுன் அடுத்த கட்டளை பிறக்கும் “சூட போட்டு தர சொல்லு... தென்னைமரம் தலைகீழாய் தலையில் தொங்க அந்த ஓடை பாலம் கடக்கும் வரை பார்வை அவள் பரட்டைதலைச்சடை பச்சை ரிப்பனிலேயே இருக்கும்.
     அடைமழை, சடைமழை அத்தனையும் சற்று ஓய தேனீர் வந்துசேரும். நல்லவேளை இங்கே இரட்டை தம்ளர் பிரச்சனை இல்லை. அவர் அவர் தம்ளரை அவரவரே கொண்டு வந்து வைத்துக்கொள்வர்.
     “என்னக்கா வட சொல்லிவிடலயா? கேட்டுக்கொண்டே கொஞ்சம் பிய்த்து கிடைத்த வடையுடன் தேனீர் இடைவேளை சிறப்பாக முடியும்.
     ஒரு மனு புளியும் தட்டி முடித்தாயிற்று. வெளியே வராண்டாவிலும் வயிற்றிலும் சரிவிகிதவெப்பம். “பசி.
     உலகில் எல்லா உயிர்களும் பாரபட்சமின்றி பெற்றுக்கொண்ட சாபம். “பசி. என் அம்மாவுக்கும் தான். என்ன பசியானாலும் எல்லா புளியையும் தட்டி முடித்த பின்னரே சாப்பாடு என வைராக்கியத்துடன் வேலை பார்ப்பாள். இந்த வைராக்கியம் தான் அவளை இன்னமும் நடமாட வைத்துக்கொண்டிருக்கிறது. “பெரியவன பணம் கட்டி படிக்கிற ஸ்கூல்ல சேத்துட்டோம்னு கையில் தூக்கின சுத்தியல் அவள் இதயம் போல் இன்னமும் துடித்துக்கொண்டிருக்கிறது.
     செந்நிற ரேசன் அரிசி. வெந்தய புளிகுழம்பு.
     மற்ற எல்லோரும் சோறும் குழம்பும் சேர்த்து வாளியில் கொண்டு வந்தால் என் அம்மா மட்டும் தனித்தனியாகத்தான் கொண்டு வருவாள். காலையிலேயே இரண்டையும் கலந்து வைதால் சலசலத்து விடுமாம். அது அவளுக்கு பிடிக்காது. இருப்பதை கொண்டு சிறப்பாக செய்ய கற்றுக்கொண்டவள். சமையல் இராணி. எத்தனை தூரம் அவளிடமிருந்து தள்ளி சென்றாலும் அவளிடம் ஈர்க்கும் சக்தி அது.
     தொட்டுக்கொள்ள ஏதும் இல்லாமலேயே எல்லாமும் காலியாகியது. பக்கத்து வாளிகளுக்கு பகிர்ந்துகொண்டது போக வயிறு மீதியை நிரப்பிக்கொண்டு சாந்தமாகியது. இனி கவலை இல்லை. அதற்கென்று ஒரு வேலை கொடுத்தாயிற்று. அது முடியும் வரை தொந்தரவு செய்யாது. குறைந்தபட்சம் அடுத்த தேனீர் வரும் வரையாவது நம்பலாம்.    
     மேல்திசையில்  சரியத்துவங்கிய   கதிர் கொட்டகையில் தன் ஆதிக்கத்தை செழுத்த முயல அதை திரைபோட்டு மறைத்துவிட்டு வேலை துவங்கியது. புளி, நார், கொட்டை தனித்தனியாக பிறிக்கும் வேலை முடிந்த்தும் தராசு தட்டுடன் துறை வருவான். அரை  கிலோ ஒரு கிலோ என  நிறுத்து குவியல் போட்டு தருவான். காலை அம்பாரத்தில் தடுமாறிய அவனது தராசுமுள் இப்போது சரியாக மையத்திலேயே நிலை கொண்டிருக்கும். வங்காள புயல் போல் தமிழகமா ஆந்திரமா என ஆட்டம் காட்டாது.
     அடுத்த தேனீரும் வந்து சேர்ந்தது. இது கம்பெனி கணக்கு. ஒரு தம்ளர் தேனீரும் ஒரு பருப்பு வடையும் தினமும் இலவசமாக கிடைக்கும். அதுவும் நான்குமுறையாவது துரைக்கு நினைவு படுத்தினால்தான் கடைக்கு ஆள் அனுப்புவான்.
     கச்சிதமாக, சதுரவடிவிலான மரச்சட்டங்கள். கட்டைக்குள் ஒரு குவியலை எடுத்து கொட்டி அமுக்கி அதன் மேலே புளியின் வெள்ளை உட்புறம் வரிசையாக அழகாக தெரியும்படி ஒட்டவேண்டும். சுருக்கமாக அங்கே இதை ரேக்கு ஒட்டுதல் என்பார்கள். இத்ற்கான தேர்வு அந்தந்த குவியலுக்குள்ளேயே செய்து பிறித்து மீதத்தை சட்டத்துள் நிரப்பி மூடியபின் அரங்கேற்றம் நடக்கும். கூரையில் இருந்து இறங்கிவரும் கயிற்றில் தொங்கிக்கொண்டு நின்ற இடத்திலேயே சட்டத்தின்மீது ஒரு நாட்டியாஞ்சலி  நடக்கும். முதல்சட்ட்த்தில் துவங்கும்  ஆட்டம் நேரம் செல்லச்செல்ல குதிகால் நரம்பு உச்சந்தலையில் தெரிக்கும். அனவாக இருந்த கயிறு ஆதாரமாக மாறும்.
     கட்டுகுலையாமல் புளியை வெளியே எடுத்தால் பெரிய தீப்பெட்டி இரண்டை ஒட்டினது போல இருக்கும். பின்புறம் கம்பெனி லேபிளை ஒட்டி கவரில் போட்டு கொடுத்தால் வேலை முடிந்தது.
     இது நடந்து கொண்டிருக்கும் போதே நானும் தங்கையும் கொட்டகை வந்தடைந்து விடுவோம். சட்டத்தின் மேல் நடனமாடுவது எனக்கு பிடித்த வேலை, ரேக் ஒட்டுவது என் தங்கை வேலை. “குதி வலிக்கும்பா  வேண்டம் இறங்கு அதற்கும் தடைபோட்டுவிடுவாள். எந்த வேலையும் செய வேண்டாமெனில் நாங்கள் ஏன் இங்கு வரவேண்டும். சிலமணி எங்களை பிரிந்த்தே அம்மாவுக்கு ஒரு யுகமாக கடந்திருக்கும். மாலை நேரமாகியதும் எங்கள் தலையை காணமல்  கைகால் ஓடாது. ஏழ்மைப்பட்டவள் பெறும் ஒற்றை சந்தோசம் இழப்பாளா என்ன?
     திடீரென எறியும் குண்டு பல்பு இருட்டத்தொடங்கியதை வெளிச்சமிட்டுக்காட்டியது.
   “அம்மா பசிக்குது... தங்கை ஆரம்பிப்பாள். “தினேசு பாப்பாவ கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போ... இந்தா எட்டணா பாப்பாவுக்கு நாலணா கொடுத்துடு
     “அம்மா ஃபைவ் ஸ்டார் என் குழந்தை பருவ நிறைவேறாத ஆசை.
     “நாளைக்கு கண்டிப்பா வாங்கலாம். இப்ப பாப்பாவ கூட்டிக்கிட்டு போ. நான் வந்துடறேன்
     பேசிக்கொண்டே துரையை பார்க்க சென்றவள் இன்னும் ஒரு அரை மனுபுளி தர கேட்டாள்.
“என்னாக்கா இப்பவே இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. இனிமே எப்ப முடிக்கரது
     “இப்ப தட்டி எடுத்து வச்சுட்டு காலைல வந்து பிருச்சுக்கரேன் உனக்கேன். போடுனா போடேன். அடுத்த வாரம் பீசு கட்டணும்ல
     அரைக்கூடை புளியுடன் கல்லருகில் கொட்டினாள். காலையில் கராராக இருந்த துரை இப்ப கொஞ்சம் கருணையுடன் நடந்துகொண்டான் போலும். புலம்பல் இல்லாமலே சுத்தியலை கையில் எடுத்தாள்.
     “என்னக்கா இன்னைக்கும் ஒன்ற மனு வங்கிவச்சுருக்கீங்க. டெய்லி இப்படியே பண்ணுங்க. ம்ம்...நா வாரே.. பதிலுக்கு காத்திருக்காமலே நடையை கட்டினாள் வடை பங்கு தந்த தோழி திருமதி.
     காலையில் முடித்து வைக்கப்பட்ட அந்த சுழற்சி மீண்டும் துவங்கப்பட்ட்து. அதே சப்தம். கூட்டை விட்டு ஜீவன் பிரியும் சப்தம்.
     ஒவ்வொருமுறை சுத்தியும் கல்லும் மோதிக்கொள்ளும்  ஒலியை விட அவள் தேக்கிவைத்து ஏவுகணையாக வெளிவிடும் மூச்சுக்காறின் சப்தம், கொட்டகை வாசலை கடந்து கேட்டுக்கொண்டிருக்க நாங்கள் வீட்டுக்குச் சென்றோம். அம்மா மட்டும் புளிதட்டிக்கொண்டிருந்தாள்.
மொத்த உலகும் நிசப்தமானாலும் என் காதுகளில் மட்டும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும் அந்த சப்தம், என் அர்த்தம் புரியா அத்தனை கேள்விகளுக்கும் மௌனசாட்சியாய் இருந்துகொண்டிருக்கும் அம்மா என் ஆதார சுருதி.